இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஒரு பெரும் தலைமுறை மாற்றமாக, அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பதவிலிருந்து விலகுவதாக நட்சத்திர வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் புதிய தலைவராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ஹர்மன்ப்ரீத்தின் பதவிக்காலம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை (ODI World Cup) வெற்றி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2022 மற்றும் 2026) அணி தங்கம் வென்றது இவரது தலைமையின் கீழ் நிகழ்ந்த மிகச்சிறந்த மைல்கற்களாகும்.
புதிய அத்தியாயம்:
மறுபுறம், இந்திய அணியின் தூணாக விளங்கும் ஸ்மிருதி மந்தனா, ஏற்கனவே அணியை வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். மேலும், மகளிர் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் அவர் தனது சிறப்பான திறமையை நிரூபித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியை வழிநடத்தும் பெருமையை அவர் விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது விலகல் குறித்து ஹர்மன்ப்ரீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இன்று, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவ கேப்டன் பதவிகளிலிருந்தும் நான் விலகுகிறேன். இது எளிதான முடிவு அல்ல. இது பல வருட நினைவுகள், உணர்வுகள், தியாகங்கள் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கப் போகும் தருணங்களைக் கொண்டது. என் அணியுடனும், இந்திய மகளிர் கிரிக்கெட்டுடனும் என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன் – எனது ரத்தம், வியர்வை, நேரம் மற்றும் பல சமயங்களில் எனது தனிப்பட்ட லட்சியங்களையும் கடந்து அணியை முதன்மையாக நினைத்தேன்.”
“கேப்டனாக நான் பல கடினமான முடிவுகளை எடுத்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு முடிவிலும் அணியை வளர்ப்பதும், மற்ற வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிப்பதும் மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. பல வீழ்ச்சிகளையும், விமர்சனங்களையும் தாண்டி, பல உயரங்களைத் தொட்டுள்ளேன். மிகுந்த மன அமைதியுடனும், திருப்தியுடனும் நான் கேப்டன் பதவிகளிலிருந்து விடைபெறுகிறேன். என் அணி தற்போது மிகச் சிறந்த நிலையில் உள்ளது. கேப்டன்சி இன்றோடு முடிகிறது, ஆனால் இந்திய கிரிக்கெட் மீதான எனது பயணம் தொடரும். இனிமேல் விளையாட்டின் மீதான காதலுக்காக மட்டுமே நான் களமிறங்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்ப்ரீத் கடந்ந்து வந்த சாதனைப் பயணம்:
அசாமின் குவகாத்தியில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்மன்ப்ரீத், ஒரு தசாப்த காலம் (10 ஆண்டுகள்) அந்தப் பொறுப்பைத் தாங்கினார். 2022-ல் ஒருநாள் அணியின் கேப்டனாகவும், 2023-ல் மூன்று வடிவங்களுக்கும் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில் இந்தியா ஒட்டுமொத்தமாக 211 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. 51 ஒருநாள் போட்டிகளில் 30 வெற்றிகளையும், 155 டி20 போட்டிகளில் 92 வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இதுவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எந்தவொரு இந்திய கேப்டனும் எட்டாத உச்சமாகும். மேலும், இவர் தலைமையேற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது.
சமீபத்தில் ஐச்சி-நகோயா Asian Games தொடரில் தங்கம் வென்றதும், ஆசியக் கோப்பையை ஒன்பதாவது முறையாகக் கைப்பற்றியதும் இவரது தலைமையின் கீழ் நிகழ்ந்த சாதனைகளாகும். பிசிசிஐ தரப்பிலிருந்து புதிய முழுநேர கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஸ்மிருதி மந்தனா அந்தப் பொறுப்பை ஏற்பது உறுதியானதாக கருதப்படுகின்றது.



