தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆரம்பம் முதலே அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, தாராபுரத்தில் தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி, தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலையில் உள்ளார். சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆளும் தவெக கட்சியைச் சேர்ந்த பி. சத்தியபாமா 2,112 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மறுபுறம், மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த அதிமுக அங்கு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடுநிலை வகித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பாமகவின் வாக்குகள் தவெக, திமுக மற்றும் அதிமுக என பல கட்சிகளுக்கும் சிதறிவிட்டன. இந்த வாக்குச்சிதறல் தாராபுரம் போன்ற தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கும் மற்றும் மற்ற முக்கிய கட்சிகளுக்கும் தங்களது வியூகங்களை மாற்றியமைக்க உதவியாக அமைந்துள்ளது.
தாராபுரத்தில் ஆளுங்கட்சிக்கு டஃப் கொடுத்து வரும் அதிமுக, மதுராந்தகத்தில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 11 மணி நிலவரப்படி தாராபுரத்தில் தவெக – 27,185, திமுக – 18,425, அதிமுக – 15,893 வாக்குகளை பெற்றுள்ளது. இங்கு கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமகவின் நடுநிலைத்தன்மையால், அக்கட்சியின் வாக்குகள் தவெக, திமுக, அதிமுக என மூன்றாக சிதறியதால் ஆளுங்கட்சிக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.
மேலும், தாராபுரம் தொகுதியில் களத்தில் உள்ள பல சுயேச்சை வேட்பாளர்களைக் காட்டிலும் ‘நோட்டா வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தாராபுரத்தில் தொகுதியில் 17 சுயேச்சை வேட்பாளர்களை விட NOTA-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சியினரை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் நோட்டாவை விட பின்தங்கி உள்ளனர். NOTA-வுக்கு மட்டும் இதுவரை 34 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகே எந்தக் கட்சியின் தேர்தல் வியூகம் முழுமையான வெற்றியைத் தந்துள்ளது என்பது தெரியவரும்.



