சென்னையில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்.11) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தருகிறார். காலை 11.15 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடையும் பிரதமரை, விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேச உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய வரவேற்பை தொடர்ந்து, கார் மூலம் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு முதல்வர் விஜய்யுடன் இணைந்து போரூர் – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து இருவரும் மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணம் மேற்கொள்கின்றனர். மெட்ரோ பயணத்தை முடித்த பின்னர், நண்பகல் 12.15 மணியளவில் போரூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று பிரதமர் சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார்.
இதனை தொடர்ந்து கிண்டி ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், பின்னர் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்திற்கு செல்கிறார். அங்கு பிற்பகல் 2.40 மணிக்கு தொடங்கும் முக்கிய விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாலை 3.45 மணியளவில் வர்த்தக மையத்தில் இருந்து மீண்டும் சென்னை விமான நிலையம் புறப்படும் பிரதமர் மோடி, மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Read More : தங்கம், வெள்ளி விலை மேலும் உயருமா? இறக்குமதிக்கு ஜிஎஸ்டி விதித்த மத்திய அரசு! நகைப்பிரியர்கள் ஷாக்!


