துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிலைடுபாய் (flydubai) பயணிகள் விமானம், சவுதி அரேபிய வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென சர்வதேச அவசரக்கால எச்சரிக்கை சமிக்ஞையை (‘Squawk Code 7700’) அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலிய விமானப் படையின் போர் விமானங்கள் உடனடியாக விரைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்தப் பயணிகள் விமானம் உடனடியாகத் திருப்பிவிடப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதை தொடர்ந்து, விமானம் கடத்தப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு கடத்தல் அபாய வதந்தி நிராகரிக்கப்பட்டது.
விமானம் அனுப்பிய ‘7700’ என்ற சமிக்ஞை, விமானத்தில் ஏதேனும் அவசரநிலை அல்லது தொழில் நுட்பப் பிரச்சனை ஏற்படும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சர்வதேச விமானப் போக்குவரத்து எச்சரிக்கைக் குறியீடாகும்.



