போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றபோது, தனது கழுத்தையே அறுத்துக்கொண்ட கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுசீந்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த மரியாந்தோனி ஆக்னலைப் பிடிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சுசீந்திரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த சேவியர் சீலன், சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமலா, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். மகளின் திருமணத்துக்காகச் சேமித்து வைத்திருந்த தங்க நகைகள் உட்பட சுமார் 60 சவரன் நகைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
கடந்த மாதம் 10-ம் தேதி, மகனின் மேல்படிப்பு தொடர்பான தேவைக்காக அமலா குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றுள்ளார். வீடு பூட்டப்பட்டிருப்பதைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை எடுத்துச் சென்றனர். அக்கம்பக்கத்தினர் மூலம் கொள்ளை நடந்ததை அறிந்த அமலா, உடனடியாக ஊர் திரும்பி வீட்டைச் சோதனையிட்டபோது நகைகள் மாயமானது உறுதியானது.
இதையடுத்து குமரி மாவட்டக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மரியாந்தோனி ஆக்னலுக்குக் கொள்ளையில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
அவரைப் பிடிக்கச் சென்றபோது, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற மரியாந்தோனி ஆக்னல் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் காயமடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மரியாந்தோனி ஆக்னல் மீது ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிவதுடன், நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: நடுவானில் தீப்பற்றிய இண்டிகோ விமானம்.. பவர் பேங்கால் ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சியில் பயணிகள்!



