பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான அமன் செஹ்ராவத் (Aman Sehrawat), கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 1 வரை நடைபெறவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
57 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைல் மல்யுத்த வீரரான இவர், கடுமையான போட்டிச் சுழற்சியின் காரணமாக சுமார் 7 கிலோ வரை உடல் எடையை இழந்துள்ளார். இதன் காரணமாக தனது உடல்நலனைப் பேணவும், உரிய ஓய்வு எடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய அணியின் ஆண்கள் பிரீஸ்டைல் பயிற்சியாளர் ஷாகோ பென்டினிடிஸ் (Shako Bentinidis) கூறுகையில், “அமன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் தற்போது 7 கிலோவிற்கும் அதிகமாக எடையை இழந்துள்ளதால், உடனடியாக அந்த எடையை மீண்டும் கூட்டுவது சாத்தியமல்ல. அமன் ஒரு சக்திவாய்ந்த வீரர்; அவருக்கு ஆற்றல் மிகவும் அவசியம். ஆற்றல் குறையும் போது அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. எனவே, அடுத்த ஆண்டு போட்டிகளுக்காக முழுமையாகத் தயாராக இதுவே சிறந்த தருணம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2025 உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடை வரம்பைக் கடந்துவிட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள அமன், தற்போது தனது உடல் எடையைக் கட்டுப்படுத்தி, பிப்ரவரி 2027-ல் தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வலுவான மறுபிரவேசம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.



