டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையின் பரிந்துரையை ஏற்று தேசிய சமூக உதவி திட்டத்தை வரும் 2026-27 முதல் 2030-31 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.53,428 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன், இந்த திட்டம் மற்றும் அதன் கீழ் செயல்படும் துணை திட்டங்களின் பெயர்களை பிரதமர் பெயருக்கு மாற்றுவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய தகுதிகளை தளர்த்தி உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
புதிய மாற்றங்களின்படி, தேசிய சமூக உதவி திட்டம் இனி ‘பிரதான் மந்திரி சாமாஜிக் சகாயதா யோஜனா’ என்ற புதிய பெயரில் அறியப்படும். இதன் கீழ் வழங்கப்பட்டு வந்த இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் ‘பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா பென்ஷன் யோஜனா’ என்றும், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம் ‘பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா’ என்றும், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதிய திட்டம் ‘பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் பென்ஷன் யோஜனா’ என்றும் மாற்றப்பட்டுள்ளன. மேலும், தேசிய குடும்ப நல திட்டம் இனி ‘பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா’ என அழைக்கப்பட உள்ளது. முதியோர், விதவை மற்றும் குடும்ப நல திட்டங்களுக்கான விதிமுறைகளில் எந்த மாற்றமும் இன்றி பழைய நிலையிலேயே தொடரும்.
உதவித்தொகை உயர்வு:
மாற்றுத்திறனாளிகள் நலனை முன்னிறுத்தி இந்த திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஊனத்தின் அளவு 80 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பிறந்தது முதலே குழந்தைகள் நிதி உதவி பெற தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 0 முதல் 79 வயது வரையிலான பயனாளிகளுக்கு மாதம் ரூ.375-ம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு மாதம் ரூ.625-ம் உதவித்தொகையாக வழங்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 3.20 கோடி ஏழை எளிய மக்கள் இதன் மூலம் தொடர்ந்து சமூக பாதுகாப்பு பலன்களை பெற உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தகுதி வரம்புகள் மற்றும் உயர்த்தப்பட்ட தொகை குறித்த விரிவான நெறிமுறைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Read More : ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்ப்பது எப்படி? வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்! முழு விவரம் உள்ளே!



