பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காமல் சுமார் 37 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததால், அவரது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு செவிலியர்களின் பணிப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த இந்தச் சம்பவம் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியம் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டு பகுதியில் உள்ள கிங்ஸ் மில் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலை, 41 வார கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்கு வந்துள்ளார்.
இதற்கு முன்னதாகவே பிரசவ வலி ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். ஆனால், அப்போது அவர் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். நள்ளிரவுக்குப் பிறகு ரத்தப்போக்கு குறித்து மீண்டும் மருத்துவமனையைத் தொடர்புகொண்டதால், உடனடியாக வருமாறு அறிவுறுத்தப்பட்டார்.
பெண் மருத்துவமனைக்கு வருவது குறித்த தகவலை தொலைபேசி வழியாகப் பெற்ற செவிலியர், அதனை மருத்துவமனையின் கணினி அமைப்பில் பதிவு செய்யவில்லை. இருப்பினும், ரத்தப்போக்குடன் பெண் வருவதைப் பணியில் இருந்த க்ளெனிஸ் வுட் மற்றும் கேத்ரின் டுயிக்னன் ஆகியோரிடம் வாய்மொழியாகத் தெரிவித்திருந்தார்.
அந்த நேரத்தில் பரிசோதனைக்காக வேறு நோயாளிகள் யாரும் காத்திருக்கவில்லை. இருப்பினும், மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணை உடனடியாகப் பரிசோதிக்காமல் 37 நிமிடங்கள் காத்திருக்க வைத்துள்ளனர். அப்போது வலியால் அவதிப்பட்டபடி சக்கர நாற்காலியில் வந்த அந்தப் பெண்ணை டுயிக்னன் அருகில் இருந்தும் கவனிக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், வுட் அந்தப் பெண்ணைத் தனி அறையில் அமர வைத்துவிட்டு, மற்றொரு பணியாளர் பரிசோதிப்பார் எனக் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பணியாளர் பிரசவப் பிரிவில் பணியாற்றியவர் என்றும், பரிசோதனைப் பிரிவுக்குப் பொறுப்பானவர் அல்ல என்றும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியது. இதற்கிடையில், வுட் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். டுயிக்னன், வுட் அமர்ந்திருந்த இடத்தில், “ஓய்வுக்குச் சென்றுள்ளார், 30 நிமிடங்களில் திரும்புவார்” என்ற வாசகம் கொண்ட அறிவிப்பையும் வைத்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த மற்றொரு செவிலியர், அந்தப் பெண் பரிசோதிக்கப்பட்டாரா எனக் கேட்டபோது, அவரே பரிசோதனை செய்துள்ளார். அப்போது அது மருத்துவ அவசரநிலை என்பது உடனடியாகத் தெரியவந்தது. இதற்கிடையில், உதவி கோரி அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் குரல் எழுப்பியபோதும், இரு செவிலியர்களும் பதிலளிக்கவில்லை என விசாரணைக் குழு கண்டறிந்தது.
நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து முன்கூட்டியே பிரிந்ததால் குழந்தையின் மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட மூளைக் காயத்தால் குழந்தை உயிரிழந்தது. 2024 ஜூலை மாதம் நடைபெற்ற விசாரணையில், மருத்துவப் புறக்கணிப்பும் குழந்தையின் மரணத்துக்குப் பங்களித்ததாகத் தீர்மானிக்கப்பட்டது.
கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைக்கு வந்தவுடனேயே பரிசோதிக்கப்பட்டிருந்தால், அதிகாலை 1.25 மணிக்குள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்திருக்க முடியும் என்றும், அவ்வாறு செய்திருந்தால் குழந்தை உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் விசாரணை அதிகாரி குறிப்பிட்டார். ஆனால், அறுவைச் சிகிச்சை அதிகாலை 2.02 மணிக்கே நடைபெற்றது.
இந்த விவகாரத்தை விசாரித்த இங்கிலாந்தின் செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் (NMC), இருவரின் செயல்பாடுகளும் மருத்துவத் தொழிலின் அடிப்படை நெறிமுறைகளை மீறியுள்ளதாகக் கண்டறிந்தது. மேலும், அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கான அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து, இரு செவிலியர்களின் பெயர்களும் தொழில்முறைப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் இனி செவிலியர்களாகப் பணியாற்ற முடியாது.
Also Read: “எனக்கு நீதான் வேணும்!” 96 வயது மூதாட்டியை மணந்த 18 வயது இளைஞர்..



