சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட வெளியீட்டை ஒட்டி, சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவுகள் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதில் சிவகார்த்திகேயன் தனது மனதில் இருக்கும் ரஜினி மீதான அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தனுஷ் ஒரே வரியில் தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் படங்களைப் பார்ப்பதில் தனக்கு இருக்கும் ஆர்வம் இன்றுவரை குறையவில்லை என்பதை சிவகார்த்திகேயன் தனது பதிவில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பே ஏற்படும் எதிர்பார்ப்பு, முதல் நாள் காட்சிக்காகக் காத்திருக்கும் உற்சாகம், முந்தைய இரவில் தூக்கம் வராத நிலை என ரசிகர்களுக்கு ஏற்படும் உணர்வுகள் தன்னிடமும் தொடர்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தைத் தனது முன்னுதாரணமாகக் கருதும் சிவகார்த்திகேயன், ஜெயிலர் 2 திரைப்படம் வெற்றிபெறவும் வாழ்த்தியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் பதிவு அவரது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தனுஷின் வாழ்த்தும் பேசுபொருளாகியுள்ளது. நீண்ட பதிவை வெளியிடாமல், “தலைவர் தரிசனம்” என்ற ஒற்றை வரியுடன் தீப்பொறி எமோஜியையும் சேர்த்து அவர் தனது வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் வெளியீட்டுடன் பிரபலங்களின் வாழ்த்துகளும் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
Also Read: “எனக்கு நீதான் வேணும்!” 96 வயது மூதாட்டியை மணந்த 18 வயது இளைஞர்..



