அமெரிக்காவில் மனிதர்களின் மூளையைத் தாக்கி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் மிக அரிய வகை பூஞ்சை தொற்று வேகமாகப் பரவி வருவதாக புதிய ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.
கிளாடோஃபைலோஃபோரா பாண்டியானா (Cladophialophora bantiana) என்றழைக்கப்படும் இந்த கருமை நிற பூஞ்சை, மனிதர்களின் மூளையை நேரடியாகத் தாக்கி சீழ் கட்டிகளை உருவாக்குகிறது. தி லான்செட் மருத்துவ இதழின் கூற்றுப்படி, இந்த பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 60% முதல் 70% பேர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழக்கின்றனர்.
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே பூஞ்சை தொற்றும், ஆனால் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவினர் எந்தவித நோயும் இல்லாத ஆரோக்கியமான மனிதர்கள் என்பதுதான் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் (CDC) இணைந்து சீயேட்டில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தத் தொற்று வழக்குகள் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் மற்றும் பென்சில்வேனியா உட்பட 21 மாகாணங்களில் இதுவரை 49 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 68 ஆகவும் உள்ளது.
சுவாசிக்கும் போது காற்றில் உள்ள பூஞ்சை வித்துக்கள் நுரையீரலுக்குள் சென்று, பின்னர் ரத்தத்தின் வழியாக மூளையை அடைகின்றன அல்லது தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாகவும் உடலுக்குள் நுழைகின்றன என நம்பப்படுகிறது.
மூளையில் சீழ் கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு இந்த பூஞ்சை தொற்று இருக்கிறதா என்பதை உடனடியாகப் பரிசோதிக்குமாறு சிடிசி (CDC) மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளது. உடனடியாக பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை கொடுப்பதோடு, அறுவை சிகிச்சை மூலம் மூளையில் உள்ள கட்டியை அகற்றுவது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



