பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா என்பது குறித்துப் புகழ்பெற்ற ‘தி பி.எம்.ஜே’ (The BMJ) மருத்துவ இதழில் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, பாக்கெட் உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடும் ஆண்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து 29 சதவீதம் வரை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பெருங்குடலின் கீழ் பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 72 சதவீதம் வரை உயர்வது தெரியவந்துள்ளது. இருப்பினும், பெண்களைப் பொறுத்தவரை பாக்கெட் உணவுகளுக்கும் பொதுவான குடல் புற்றுநோய்க்கும் நேரடித் தொடர்பு பெரிதாக இல்லை என்றாலும், உடனடியாக சமைத்து உண்ணக்கூடிய ரெடி-டூ-ஈட் (Ready-to-eat) உணவுகளை அதிகம் உண்ணும் பெண்களிடம் சில ஆபத்துகள் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அனைத்து பாக்கெட் உணவுகளும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டவை அல்ல என்பதால், இறைச்சி சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றுக்கும் புற்றுநோய் அபாயத்திற்கும் நேரடியான தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உணவுப் பழக்கம் மற்றும் பிற வாழ்க்கை முறை காரணிகளால் இந்த முடிவுகளில் சிறு மாறுதல்கள் இருக்கலாம் என்றாலும், பாக்கெட் உணவுகளைக் குறைத்துவிட்டு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.



