சாப்ட்வேர் துறையில் சாதிக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் பெரிய கனவு. ஆனால் பொருளாதாரக் குறைபாடு காரணமாக பலரால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் முயற்சியாக Freshworks நிறுவனம் தனது சமூகத் திட்டமான FSSA (Freshworks STS Software Academy) மூலம் வாய்ப்பு வழங்குகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பிளஸ் டூ அல்லது டிப்ளமோ முடித்த, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 12 மாதங்கள் முழுக்க இலவசமாக உயர்தர சாப்ட்வேர் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 12ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப மாத வருமானம் ₹20,000-க்குள் இருக்க வேண்டும். கோடிங் தெரிய வேண்டிய அவசியமில்லை; கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும்.
தேர்வு முறை எப்படி? மாணவர்கள் முதலில் FSAT எனும் ஆன்லைன் தேர்வில் (அடிப்படை கணிதம், ஆங்கிலம்) தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகு தொலைபேசி நேர்காணல் நடைபெறும். பின்னர் சென்னையில் 21 நாள் பூட்கேம்ப் நடத்தப்பட்டு, இறுதியாக 90 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பயிற்சி 100% இலவசம். மாணவர்களுக்கு மாதம் ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். மூன்று வேளை உணவு இலவசம். லேப்டாப், இணைய வசதி, ஆங்கிலம் மற்றும் மென்திறன் பயிற்சிகளும் வழங்கப்படும். பயிற்சி முடிவில் SASTRA University மற்றும் Freshworks இணைந்து சான்றிதழ் வழங்கப்படும். Zoho, Chargebee உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தி மாணவர்களை பணியில் அமர்த்துகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 மே 2026.



