75 வயது முதியவருக்கும் 30 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவுள்ள தகவல் உத்தரப் பிரதேசத்தில் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் இடையே 45 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் முதியவரின் மகளுடைய தோழி என்பதுதான்.
உத்தரப் பிரதேசத்தின் ஔரையா மாவட்டம் அரியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்சுகர் (75). இவரது மனைவி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், தற்போது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க ராம்சுகர் முடிவு செய்துள்ளார்.
இந்தக் கதையின் தொடக்கம் சமூக வலைதள நட்புதான். ராம்சுகரின் மகள் ராதா, யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், தயால்பூர் பகுதியைச் சேர்ந்த ரீனா ராஜ்புத்தும் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் ராதாவுக்கும் ரீனாவுக்கும் நட்பு ஏற்பட்டது. தோழியைச் சந்திக்க ரீனா அடிக்கடி ராதாவின் வீட்டுக்குச் சென்றபோது, ராம்சுகருடன் அவருக்குப் பழக்கம் உருவானது.
சுமார் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் பழக்கம் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அண்மையில் ஔரையாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அந்த நிகழ்வின் காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, இந்த ஜோடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து வெளியான தகவல்களின்படி, நவராத்திரி பண்டிகைக்குப் பிறகு திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், திருமணத் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே, ரீனாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவரங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை.
நிச்சயதார்த்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்தத் திருமண முடிவுக்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. வயது வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் இருவரும் தங்களது வாழ்க்கையைத் தேர்வு செய்திருப்பதை சிலர் ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் இந்த உறவின் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர்.
45 ஆண்டுகள் வயது வித்தியாசம், மகளின் தோழியுடன் ஏற்பட்ட காதல், இணையத்தில் பரவும் நிச்சயதார்த்த வீடியோ என ராம்சுகர் – ரீனா ஜோடி தற்போது பேசுபொருளாகியுள்ளது. இருவரின் திருமணம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
Also Read: பெற்றோருடன் தூங்கிய 7 வயது சிறுமி திடீர் மாயம்! 5 நாட்களாகியும் கிடைக்காத தடயம்! 100 போலீசார் தீவிர தேடுதல்!



