2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழக வெற்றிக்கழகம். கடந்த 2024-ம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் பெண்களை நேரடியாக கவரும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் உள்ளிட்ட வாக்குறுதிகள் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றன.
தற்போது தேர்தல் முடிவுகளின்படி தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை எட்டவில்லை. இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அதிமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றால் அவர் போடும் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது. பலரும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டத்தில்தான் விஜய் முதல் கையெழுத்திடுவார் என கருதுகின்றனர்.
அதேபோல், மாநிலம் முழுவதும் இயங்கும் நகர. மாநகர், மாவட்டங்களுக்கு இடையேயான அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் வெற்றிப்பயணம் திட்டத்திற்கும் அவர் முன்னுரிமை கொடுக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கையெழுத்திட்டதைப் போல, பெண்கள் வாக்குகளை மையமாக வைத்து தவெகவும் அதேபோன்ற அரசியல் நகர்வை மேற்கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.



