புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியில் அமைந்துள்ள கைலாசா ஆதீன ஆசிரம வளாகத்தில், நவராத்திரி கொலு மற்றும் ஆயுத பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆன்மிக விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கைலாசாவில் இருந்து காணொளி நேரலை வழியாக நித்யானந்தா திடீரெனத் தோன்றி உரையாற்றினார். அப்போது அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏ மோகன்தாஸ் ஆகியோரது பெயர்களை நேரடியாக குறிப்பிட்டு அழைத்த அவர், கைலாசா சார்பாக அவர்களுக்குச் சிறப்பு மரியாதை செய்யுமாறு ஆசிரம நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கிருந்த ஆசிரம நிர்வாகிகள் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். தொடர்ந்து திரையில் தோன்றிய நித்யானந்தா இருவருக்கும் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். மேலும் நித்யானந்தா எழுதிய ஆன்மிக நூல்களும் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பொதுமக்களுக்கு நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் விழாவில் திரண்டிருந்த பெண்களுக்குப் புடவை மற்றும் மங்களப் பொருட்கள் அடங்கிய அன்புப் பரிசுகளையும் அவர்கள் வழங்கினர். விழாவையொட்டி ராஜராஜேஸ்வரி அம்மன், மீனாட்சி அம்மன் அலங்காரங்களில் கொலு வழிபாடுகள், சுமங்கலி பூஜை, கன்னிப் பெண்கள் பூஜை மற்றும் அன்னதான நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடந்தேறின. புதுச்சேரி மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நித்யானந்தா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆசி வழங்கிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம்! சுற்றுலாப் பயணிகளுக்கு அதிரடி தடை!



