குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பழக்கவழக்கம் காரணமாக வீடுகளுக்குள் புகை பிடிக்கும்போது, அந்த புகை அவர்களை மட்டுமின்றி அருகில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளையும் நேரடியாகத் தாக்குகிறது. முழு வளர்ச்சி அடையாத சுவாச மண்டலமும், போதிய நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாத காரணத்தால், காற்றில் கலக்கும் புகையிலை நச்சுகள் குழந்தைகளின் உடலை உடனடியாகப் பலவீனப்படுத்துகின்றன. தொடர்ந்து இத்தகைய நச்சுப் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி தடைபடுவதுடன், தீவிர மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் மிக எளிதாக தொற்றிக் கொள்கின்றன.
ஏற்கனவே ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை பாதிப்பு உள்ள குழந்தைகளுக்குப் புகையிலை நச்சு மேலும் கடுமையான மூச்சுத்திணறலை உண்டாக்குகிறது. எவ்வித குறைபாடும் இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளாக இருந்தாலும், தொடர் புகை சூழலில் வளரும்போது பிற்காலத்தில் அவர்களுக்குத் தீராத சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நச்சுப் புகை குழந்தைகளின் நடுக்காதுப் பகுதியில் வீக்கத்தை உண்டுபண்ணி காதுவலி, சீழ் வடிதல், காதில் திரவம் தேங்குதல் உள்ளிட்ட தீவிர காது தொற்று பிரச்சனைகளை உருவாக்கி, கேட்கும் திறனையே பறிக்கும் நிலைக்கு தள்ளுகிறது.
பச்சிளம் கைக்குழந்தைகள் உள்ள வீடுகளில் இத்தகைய புகை சூழல் நிலவுவது, தூக்கத்திலேயே நிகழும் திடீர் சிசு மரணம் எனப்படும் SIDS (Sudden Infant Death Syndrome) அபாயத்தைப் பல மடங்கு அதிகரிக்கிறது என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தனி அறையில் புகை பிடிப்பதோ அல்லது ஜன்னல்களைத் திறந்து வைப்பதோ குழந்தைகளுக்குப் பாதுகாப்பைத் தந்துவிடாது. புகையிலையின் நச்சுத் துகள்கள் தரை, உடைகள், திரைச்சீலைகள் மற்றும் மேசைகளில் படியும் மூன்றாம் நிலைப் புகைத் தாக்கம் காரணமாக, குழந்தைகள் தரையில் தவழ்ந்து விளையாடி பொருட்களை வாயில் வைக்கும்போது அந்த நச்சுகள் நேரடியாக உடலுக்குள் சென்று விபரீதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, குழந்தைகளின் எதிர்கால வாழ்வையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க, வீடுகளை முற்றிலும் புகையில்லா மண்டலமாக மாற்றுவதே ஒரே வழியாகும்.
Read More : கைலாசாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்! ஆசி வழங்கிய நித்யானந்தா! வெடித்த அரசியல் சர்ச்சை!



