உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், வெறிநாய் கடித்ததால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பசுவின் பாலில் செய்யப்பட்ட ‘பிரசாதத்தை’ குடித்த இரு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 450 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தாடி காஸ் (Dadi Khas) மற்றும் அதனை ஒட்டிய கோவிந்த்பூர் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரம்மாண்ட தடுப்பூசி முகமை நடத்தியது.
நாய் கடித்ததை அறியாத உரிமையாளர்:
பசுவின் உரிமையாளரான நவாமி யாதவ் கூறுகையில், பசு கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், செவ்வாய்க்கிழமை அதன் நிலைமை மோசமடைந்ததாகவும் தெரிவித்தார். தெருநாய் எப்போது பசுவை கடித்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
பசுவின் நிலைமை மோசமடைந்ததால், தனியார் கால்நடை மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் நாய் கடித்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர். அதன் பிறகு, அந்தப் பசு விசித்திரமாக குறைத்துக்கொண்டே செவ்வாய்க்கிழமை மாலையில் உயிரிழந்தது.
பசுவிற்கு ரேபிஸ் இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பிய போதிலும், அதிகாரிகள் அதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
துர்க்கா பூஜையில் விநியோகிக்கப்பட்ட பிரசாதம்:
துர்க்கா பூஜை வழிபாட்டின் போது இந்தப் பசுவின் பாலில் தயாரித்த ‘சரணாமிர்தம்’ பிரசாதமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்தப் பால் இரண்டு உள்ளூர் கடைகளுக்கும், பல வீடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. பசுவின் இறப்புச் செய்தி பரவியதும், பிரசாதத்தைச் சாப்பிட்ட பொதுமக்கள் பீதியடைந்து தடுப்பூசி போடத் தொடங்கினர்.
செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 50 பேர் சமூக சுகாதார மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சுகாதாரத் துறை, புதன்கிழமை (அக்டோபர் 21) தாடி காஸ் கிராமத்திற்குச் சென்று சிறப்புத் தடுப்பூசி முகாம் அமைத்தது.
மருந்தாளுநர் சித்தார்த் சிங் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் கிராம மக்களுக்கத் தீவிரமாகத் தடுப்பூசி செலுத்தினர். புதன் மாலைக்குள் சுமார் 400 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 450 ஆக உயர்ந்தது.
அச்சப்படத் தேவையில்லை – அதிகாரி விளக்கம்:
இதுகுறித்து கோரக்பூர் துணை முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜேஷ் குமார் கூறுகையில், “நாய் கடித்த பசு உயிரிழந்ததால் மக்கள் பயமடைந்தனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 450 பேருக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது” என்றார்.
மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், “தயிராக மாற்றுவதற்கும், சரணாமிர்தம் தயாரிப்பதற்கும் முன் பால் கண்டிப்பாகக் காய்ச்சப்பட்டிருக்கும். பாலைக் காய்ச்சும் போது அதில் உள்ள வைரஸ்கள் அழிந்துவிடும் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்களின் பயத்தைப் போக்குவதற்காகவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன” என்று விளக்கமளித்துள்ளார்.



