செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. வெங்கடேசன் தனது தாய் பெருந்தேவி (61) மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். திருமணமான நாள் முதலே மாமியார் பெருந்தேவிக்கும், மருமகள் இந்துஜாவுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. தங்களுடைய குடும்பச் சண்டைகளுக்கெல்லாம் மாமியார்தான் மூலகாரணம் என்ற கடும் ஆத்திரமும் வன்மமும் இந்துஜாவின் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று, பெருந்தேவி கழிவறைக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனைத் தனக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இந்துஜா, மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஓடிச் சென்று அவரது கழுத்தை பலமாக நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் எதுவுமே அறியாதவர் போல அக்கம் பக்கத்தினரிடம் மாமியார் கழிவறையில் தவறி விழுந்து மயங்கிவிட்டதாக கூறி, அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பெருந்தேவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பெருந்தேவியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் வெளிவந்த அறிக்கை மருத்துவர்களையும் போலீசாரையும் அதிர வைத்தது. பெருந்தேவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டது அந்த அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு நகர காவல்துறையினர், இந்துஜாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் நிலை குலைந்த இந்துஜா, உண்மைகளை உடைத்தார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மாமியார் எங்கள் குடும்ப நிம்மதியை கெடுத்து வந்தார். அவர் இறந்தால்தான் நாங்கள் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ முடியும் என்பதால்தான் கழிவறையில் விழுந்து கிடந்தபோது அவரது கழுத்தை நெரித்துக் கொன்றேன்” என்று வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்துஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



