ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த மூன்று டிக்கெட் பரிசோதகர்களை மது போதையில் இருந்த பயணிகள் குழு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரயில்வே ஊழியர்களிடம் இருந்த டிக்கெட் பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் கையடக்கக் கருவிகளையும் அந்தக் குழுவினர் பறித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வசந்த், அமித், அங்கித் ஆகிய மூன்று டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் இருந்தனர். அப்போது, நள்ளிரவு 1.27 மணியளவில் சில பயணிகள் மது போதையில் பெட்டிகளுக்குள் சுற்றித் திரிந்ததுடன், விசில் அடித்துக்கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர்.
பயணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் டிக்கெட் பரிசோதகர்கள் முயன்றுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்தக் குழுவினர் ஊழியர்களைத் தாக்கியதுடன், அவர்கள் பயன்படுத்திய டிக்கெட் பரிசோதனை இயந்திரங்களையும் கையடக்கக் கருவிகளையும் பறித்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்வேயின் உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் அளித்தனர். மேற்கு ரயில்வே மஸ்தூர் சங்கத்தின் பரோடா கோட்ட நிர்வாகியும் சம்பவம் குறித்து அறிந்து, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவுவதற்காக ரயில் நிலையத்துக்குச் சென்றார்.
பரோடா கோட்ட ரயில்வே மேலாளர், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு மூத்த கோட்ட வணிக மேலாளருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பயணிகள் மீது பரோடா ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதே பயணிகள் குழுவினர், ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள மேற்கு ரயில்வே மஸ்தூர் சங்கம், உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. ரயிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு ரயில்வே பொது மேலாளரிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, புறநகர் மற்றும் மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிபுரியும் டிக்கெட் பரிசோதகர்கள் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை எதிர்கொள்வதாக ரயில்வே தொழிற்சங்கம் கவலை தெரிவித்துள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Also Read: படப்பிடிப்பில் பிரபுதேவா செய்த காரியம்.. இத்தனை நாள் கழித்து வெளியான தகவல்!



