ராகுல் காந்தியின் கேரளா பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 125 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் சிக்கித் தவிப்பதாகத் சொல்லப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 949790 0402, 0471 2721566 ஆகிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரையில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பின் காரணமாக சுற்றுலாத் தலங்கள், குவாரிகள் மற்றும் சுரங்க வேலைகள் நிறுத்த உத்தரவிடப்பட்டது. தற்போது வரையில், மாவட்டத்தில் உள்ள 196 குடும்பங்களைச் சேர்ந்த 854 பேர் 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக தொகுதியின் எம்.பி ராகுல் காந்தி இன்று கேரளா செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கு எங்குமே விமானம் தரையிறங்குவதில் சிக்கல் நிலவும் என்பதால் பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் இன்று வயநாடு பயணம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் வயநாடு வருகை தருவதாக ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் வயநாடு மக்களுடன் உள்ளன. வயநாடு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என தெரிவித்துள்ளார்.