கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.
நள்ளிரவு முதல் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.