தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்.2 காந்தி ஜெயந்தி, நவ.1 உள்ளாட்சிதினம் என ஆண்டுக்கு 6 நாட்கள் நடத்தப்பட வேண்டும். நவ.1 உள்ளாட்சி தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இந்த கிராம சபைக் கூட்டம் வரும் 23-ம்தேதி நடத்தப்பட வேண்டும்.
கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி வரும் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். அரசாணைப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் வரும் 23-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வசதியாக கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக்கூடாது.
கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்கள், சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவிக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
மேலும் தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியன குறித்தும் விவாதிக்க வேண்டும். இந்தக் கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவிட வேண்டும். அதுகுறித்த அறிக்கையை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் அன்றைய தினமே ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.