வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.30) சூறாவளி வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பலத்த தரைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தான், புயலுக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அவசர தகவலுக்காக செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்து கொள்ள வேண்டும். வானிலை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். அவசர கால பெருட்கள் மற்றும் முதலுதவி பெட்டிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் கூரையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் / செல்லப் பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். புயல் அல்லது வெள்ள எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட உடனே உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ சென்றுவிட வேண்டும். நீங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பயிற்சி முகாம்களை நடத்துங்கள். அரசு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். அறிவிப்புகள் பரிந்துரைக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.