பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விற்பனை 3 பிரிவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் 100 கோடி ரூபாய் அனுமதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விற்பனை 3 பிரிவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்து தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனை சங்கம், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் (ரேஷன் கடைகள்) போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் ‘இனிப்பு பொங்கல் தொகுப்பு’ என்ற பெயரில் ரூ.199க்கும், கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999க்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பொருட்களின் தொகுப்பினை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மேலாண் இயக்குனர்கள்,கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மேலாண்மை இயக்குனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்