நடிகை கஸ்தூரி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று பாஜக மாநிலத் தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.
இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி, தீவிரமாக திமுகவுக்கு எதிராக கருத்துகளைப் பேசி வருகிறார். இந்தச் சூழலில் தான் இன்று திடீரென சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ எச் ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பாஜக அலுவலகம் சென்ற கஸ்தூரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஸ்தூரி பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. முன்னதாக சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கஸ்தூரி, திமுகவை வீழ்த்த, அதிமுக, பாஜக, விஜய்யின் தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.