கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணியத் தலமாக சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. இந்த கோயில் திருநெல்வேலி மாவட்டம், உவரியில் அமைந்துள்ளது.
கோயில் உருவான வரலாறு : புராண கதைகளின்படி பால், மோர், தயிர் ஆகியவற்றை பானைகளில் வைத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர் யாதவ குல மக்கள். அவர்களில் ஒரு மூதாட்டி, ஒருநாள் அந்தக் கடம்பமர வேருக்கு அருகில் அமர்ந்து, அழுதுகொண்டிருந்தாள். ‘என்ன பொழப்பு இது! தினமும் பானைகளைச் சுமந்துக்கிட்டு, விக்கிறதுக்குக் கிளம்பினா, கடம்பவேர் தடுக்கி விழுந்து, பானை உடைஞ்சு, பாலும் மோரும் தரையில ஆறாட்டம் ஓடுறதே வேலையாப் போச்சு! காலம் போன காலத்துல கண்ணும் தெரியலை, மண்ணும் தெரியலை எனக்கு!’ என்று புலம்பினாள். வெறுங்கையுடன் வீடு திரும்பினாள்
விவரம் அறிந்து ஆவேசமான அவளின் கணவர், அந்த கடம்ப மரம் அருகில் வந்தார். ‘உன்னோட அடிவேர் கூட இருக்கக்கூடாது! இதோ… உன்னை அழிக்கிறேன், பார்’ என்று அரிவாளால் அடிவேர்ப் பகுதியில் வெட்டினார். அவ்வளவுதான்… அங்கிருந்து குபுக்கென்று கிளம்பி, பீறிட்டு அடித்தது ரத்தம். இதில் அரண்டு போனவர், தலைதெறிக்க ஓடி, ஊர்ப் பெரியவரிடம் விவரத்தைத் தெரிவித்தார். பீதியுடன் ஊரே திரண்டது.
அப்போது ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்தது. ‘வந்திருக்கறது சிவன். லிங்கமா, சுயம்புவா நமக்காக வந்திருக்காரு. உடனே சந்தனத்தை அரைச்சு, ரத்தம் வர்ற இடத்துல தடவுங்க. சரியாயிடும்!’ என்று சொல்லி, தென்னையும் பனையும் சூழ்ந்த இடத்தில், சந்தன மரத்தையும் காட்டியருளினார். பிறகு, சந்தனம் அரைத்துப் பூசியதும், ரத்தம் வழிவது நின்றது. அதையடுத்து அங்கேயே சிறிய கூரை வேய்ந்து, கோயிலாக்கி வழிபடத் துவங்கினார்கள்! அந்த ஊர்ப் பெரியவரே கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து, கோயிலை வளரச் செய்தார். பிறகு, மண்டபம் கட்டி, சந்நிதி அமைத்து, ஆலயம் உருவானதாம்!
மார்கழி மாதம் முழுவதும் சூரிய பூஜை : பொதுவாக, சிவன் கோயில்களில் சூரிய பூஜை ஓரிரு நாட்கள் நடைபெறும். ஆனால், உவரி சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரிய பூஜை நடைபெறுகிறது. அதாவது, மார்கழி மாதம் முழுவதும் இந்த தலத்தில் உள்ள சுயம்பு லிங்க சுவாமியை சூரிய பகவான் வழிபடுகிறார். சூரிய திசை நடக்கக்கூடியவர்கள் மார்கழி மாதம் அதிகாலையில் சுயம்பு லிங்கம் சுவாமி கோயிலுக்கு வந்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
வழிபடும் முறை : உவரி சுயம்பு லிங்க சுவாமியை வழிபட்டு ஒரு காரியத்தைத் தொடங்கினால் தொட்டதெல்லாம் துவங்கும் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களின் நம்பிக்கை. இங்கு ஏராளமானவர்கள் கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அதாவது, வேண்டுதல் நிறைவேற ஓலை பெட்டியில் கடலின் உள்ளே இருந்து மண் எடுத்து கடற்கரையில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இப்படிச் செய்தால் மண் தொடர்பான தோஷம் விலகும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், புற்று நோய் அகலவும், செய்வினை கோளாறு நீங்கவும், நாகதோஷம் விலகவும், மாங்கல்ய பாக்கியம் கூடி வரவும் இக்கோயிலில் வழிபாடுகள் உள்ளன.