கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 56 வயதான முருகவேல். இவருக்கு 45 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முருகவேல் தனது குடும்பத்துடன் வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ராணிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான முனியாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
முனியாண்டிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் தான் ராணியின் மகனும் வேலை செய்துள்ளார். அப்போது தான் முனியான்டிக்கும் ராணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முனியாண்டி ராணியை அழைத்து கொண்டுபோய் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து ராணியின் கணவனான முருகவேலுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, முருகவேல் தனது மனைவியை சமாதானம் பேசி அழைத்து வந்து தாராபுரத்தில் தங்கி உள்ளார். ஆனால் அங்கும் முனியாண்டி தேடி வந்து ராணியை அழைத்து சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த முருகவேல், மீண்டும் தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தனது வீட்டிற்க்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அப்போதும் முனியாண்டி ராணியை தேடி வந்துள்ளார்.
இதனால் முருகவேல், கருமத்தம்பட்டி அருகே உள்ள தோட்டத்து வீட்டிற்கு தனது குடும்பத்துடன் இடம் மாறியுள்ளார். இந்நிலையில், மீண்டும் முனியாண்டி ராணி இருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்டு வந்து விட்டார். இதனால் அத்திரம் அடைந்த முருகவேல், என் குடும்பத்தை நிம்மதியாக இருக்க விட மாட்டாயா? எனக் கேட்டபடி அவரது நெஞ்சில் கத்தியால் குத்தி உள்ளார்.
இதனால் பதறிப்போன முனியாண்டி, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். முருகவேல் குத்தியதில் பலத்த காயம் அடைந்த முனியாண்டி ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், முனியாண்டியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு முனியாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், முனியாண்டியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முருகவேலை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.