Starship rocket: எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட் ஏவுதலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது. நேரலை காட்சிகளின் படி ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் எஞ்சின்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.
இதையடுத்து தெற்கு ஃபுளோரிடா மற்றும் பஹாமஸ் அருகில் உள்ள வான்பகுதியில் ராக்கெட் வெடித்து சிதறியது. இதன் காரணமாக மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களின் தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஃபெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது. ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ், “ராக்கெட் திட்டமிடப்படாத பிரிதலை எதிர்கொண்டு அதன்பிறகு அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராக்கெட் வெடித்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் தோல்விக்கான மூல காரணத்தை நன்கு புரிந்து கொள்ள இன்றைய விமான சோதனையில் இருந்து தரவுகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். எப்போதும் போல, நாம் என்ன கற்றுக் கொள்கிறோமோ அதில் இருந்து தான் வெற்றி கிடைக்கும். அந்த வகையில், இன்றைய சம்பவம் ஸ்டார்ஷிப் நம்பகத்தன்மையை அதிகப்படுத்த நமக்கு கூடுதல் பாடங்களை கற்பிக்கும் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.