கடந்தாண்டு மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இப்போது, அந்நாட்டில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இருந்து வரும் நிலையில், இவர் இந்தியாவுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதேசமயம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் வங்கதேசம் – இந்தியா உறவுகளுக்கிடையே கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், வங்கதேசத்தின் ராணுவ தளபதியாக உள்ள வாக்கர் உஸ் ஜமானை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு வேறொருவரை நியமிக்க இடைக்கால அரசு மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பு சதித்திட்டம் தீட்டியது. அதன்படி, லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைசூர் ரஹ்மானை புதிய ராணுவ தளபதியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இவர், வங்கதேச ராணுவத்தின் Quartermaste General அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
பைசூர் ரஹ்மான், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் நம்பிக்கை பெற்றவர். இதனால், தங்களுக்கு விசுவாசமான பைசூர் ரஹ்மானை ராணுவ தளபதியாக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளது. வாக்கர் உஸ் ஜமான், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர் ஆவார். இதனால், அவர் கடந்தாண்டு வங்கதேச ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், இதுபற்றிய அனைத்து விஷயங்களையும் சேகரித்த இந்திய நாட்டின் உளவுத்துறை, கடந்த ஜனவரி மாதமே ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானுக்கு தகவல் அனுப்பியது. ஆனாலும், முழுமையாக விவரங்களை கொடுக்க முடியவில்லை. வாக்கர் உஸ் ஜமானின் சாதனங்கள் ஒட்டுகேட்கப்படும் அபாயம் இருந்தது. இதனால், வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானின் பதவியை பறிக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா தகவல் கொடுத்தது.
இதுகுறித்து இந்தியா கூறுகையில், வங்கதேசத்தில் நடக்கும் இந்த செயல் தெற்காசியா பிராந்தியத்தின் மீது பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ்தான் போல் வங்கதேசமும் மாறி விடும் என்றும் இதனால் மொத்த உலகுக்கு சிக்கல் ஏற்படலாம் என தெரிவித்தது. இதை அமெரிக்கா சீரியஸாக எடுத்துக் கொண்டது. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், வங்கதேச இடைக்கால அரசின் முகமது யூனுஸ்க்கும் பழைய பகை உள்ளது.
இந்நிலையில் தான், அமெரிக்காவில் இருந்து முகமது யூனுஸ்க்கு ஒரு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. வங்கதேசத்தில் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானின் பதவி நீக்க நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த முயற்சி கைவிடப்பட்டது. மேலும், ராணு தளபதி வாக்கருக்கு எதிராக பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சேர்ந்து செயல்பட்ட பைசூர் ரஹ்மான் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் மீது ராணுவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.