பிரபல நடிகர் மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமீபகாலமாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக சமீபத்தில் கராத்தே மாஸ்டர் மற்றும் நடிகருக்கான ஷிஹான் ஹுசைனி ஊடகங்களின் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் கூறி இருந்தார். இது குறித்தும் வில் வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தலின்படி ஷிஹான் ஹுசைனிக்கு மருத்துவச் சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
உடல்நிலை தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கையுடன் சமீபத்தில் பேசி இருந்தார். இந்த நிலையில் ரத்த புற்றுநோயால் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.
கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். விஜய் நடித்த பத்ரி படத்தில், விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார். இதைத் தவிர்த்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.