சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகிக்க கடற்கரையோரமாக குழாய்கள் பதிப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (பி.என்.ஜி) திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டரை முன்பதிவு செய்தல், கையாளுதல், சேமித்து வைத்தல் மற்றும் அளவிடுதல் போன்ற சிரமங்களை தவிர்க்கிறது. மேலும், காற்றை விட இலகுவாக இருப்பதால், பி.என்.ஜி சமையலுக்கு பாதுகாப்பான எரிபொருளாகும். ஒரு யூனிட்டுக்கான ஆற்றல் உள்ளடக்கத்தின் அடிப்படையில் (கிலோகலோரி / கிலோ), எல்.பி.ஜி.யுடன் ஒப்பிடும்போது பி.என்.ஜி ஒப்பீட்டளவில் சாதகமானது, இருப்பினும் இயற்கை எரிவாயுவின் விலை, கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயுவின் விலை, மாநில வரிகள், கட்டணம், வழங்கப்பட்ட மானியம், போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவு போன்ற பல மாறும் காரணிகளைச் சார்ந்துள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB), நாடு முழுவதும் சுமார் 33,478 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் நெட்வொர்க்கிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய எரிவாயு கட்டமைப்பை உருவாக்கவும், நாடு முழுவதும் இயற்கை எரிவாயு கிடைப்பதை அதிகரிக்கவும் இது உதவும். மார்ச் 2024 நிலவரப்படி, தோராயமாக 24,881 கிமீ குழாய் செயல்பாட்டில் உள்ளது மற்றும் 10,404 கிமீ குழாய் கட்டுமானத்தில் உள்ளது
தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. குஜராத், கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இது எல்பிஜி சமையல் எரிவாயு உடன் ஒப்பிடும் போது செலவு 20 சதவீதம் குறைவாக இருப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.
சென்னையை சேர்ந்த டோரண்ட் கேஸ் என்ற நிறுவனம் சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகள்தோறும் சமையல் காஸ் விநியோகிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் ரூ.48 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெட்டுவாங்கேணி, நீலங்காரை, திருவான்மியூர், அடையார், சேப்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகள் வழியாக 466 கிமீ நீளத்துக்கு கடலோரப் பகுதியில் குழாய்களை அமைக்க உள்ளது. இந்த நிலையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகிக்க கடற்கரையோரமாக குழாய்கள் பதிப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.