திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்..? இந்த பொம்மை முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன்- அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா..? ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை.
இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது. மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு. உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.