அலட்சியத்தால் மக்கள் உயிருடன் விளையாடும் திமுக அரசு, இனியாவது தன் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தி.மு.க வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கழிவுநீர் கலந்த குடிநீரால் உறையூரில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அலட்சியத்தால் மக்கள் உயிருடன் விளையாடும் திமுக அரசு, இனியாவது தன் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கடந்த டிசம்பர் மாதம் பல்லாவரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்து, பல உயிர்கள் பலியாகிய ரணம் ஆறுவதற்குள்ளேயே, அதே போன்ற வேதனையான நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரால் உறையூரில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலியானதாக வெளியாகியுள்ள பத்திரிகைச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
தொடர்ந்து 15 நாட்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகாரளித்த போதே தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய அசாம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம். அலட்சியத்தால் மக்கள் உயிருடன் விளையாடும் திமுக அரசு, இனியாவது தன் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க சிகிச்சையும் நிவாரணமும் அளிக்க வேண்டும் என பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.