ஏப்ரல் 22 அன்று பஹல்காம் அருகே சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் அட்டாரியில் உள்ள ஒரே செயல்பாட்டு நில எல்லைக் கடவையை மூடுவது உள்ளிட்ட பல பதிலடி நடவடிக்கைகளை இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்தது. நதி நீர் நிறுத்தப்படுவது போர் நடவடிக்கையாக பார்க்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியதுடன், இந்திய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவது மற்றும் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவது போன்ற எதிர் நடவடிக்கைகளை பாகிஸ்தானும் மேற்கொண்டது.
இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலை நோக்கி உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் தனது நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க உதவுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
துருக்கி அதிபர் ரிசெப் தயிப் ஈரடாகன், இரு நாடுகளும் அமைதிப் பாதையில் செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். திங்கட்கிழமையன்று துருக்கியில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், “பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபுடன் விவாதித்தோம்” என அவர் கூறினார்.
புதிய போர் உருவாகாமல் இருக்க வேண்டும். இந்தியா–பாகிஸ்தான் அமைதியை நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கிடையே, பாகிஸ்தானில் துருக்கியின் ஆறு C-130 ஹர்குலீஸ் விமானங்கள் தரையிறங்கியதாக ஓஎஸ்ஐஎன்டி (OSINT) விமான கண்காணிப்புப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்களில் இராணுவக் கையெழுத்துப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இதை துருக்கி அரசு கடுமையாக மறுத்துள்ளது. “துருக்கி ஆயுதங்களை அனுப்பியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை” என்று அவர்கள் X தளத்தில் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நிலைபெற்றதால், இந்தியாவின் உள்நாட்டு வட்டாரங்களில் அதிருப்தி பரவியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கூட்டுறவு வளர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
Read more: பஹல்காம் தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி.. இந்தியாவுக்கு சொன்ன மெசேஜ் என்ன..?