இயற்கையின் அதிசயங்கள் மனிதர்களை எப்போதும் வியக்க வைக்கின்றன. பூமியில் பெரும்பாலான நாடுகளில் பகலும் இரவும் சமமாக மாறி வருகின்றன. ஆனால் உலகில் ஒரு நாட்டில் இரவு என்பது வெறும் பெயருக்கு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவின் வடபகுதியில் அமைந்துள்ள நார்வே இந்த அதிசய நிகழ்வுக்கு பெயர் பெற்ற நாடாக உள்ளது. குறிப்பாக ஆர்க்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள பகுதிகளில், “நள்ளிரவு சூரியன்” (Midnight Sun) எனப்படும் இயற்கை நிகழ்வு காணப்படுகிறது. நார்வேயின் ஹேமர்ஃபெஸ்ட் நகரில், கோடைக்காலங்களில் சூரியன் இரவு சுமார் 12:43 மணிக்கு மறைந்துவிட்டு, மீண்டும் சுமார் 1:23 மணிக்கு உதயமாகிறது. இதனால் முழுமையான இருள் நிலவுவது வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே என்று கூறப்படுகிறது.
நள்ளிரவிலும் சூரியன் முழுமையாக மறையாமல் வானில் ஒளி நிலைத்து காணப்படும் நிலை இதுவாகும். ஆர்க்டிக் வட்டத்திற்குள் பூமியின் அச்சு சாய்வு காரணமாக, கோடை மாதங்களில் சூரியன் நீண்ட நேரம் வானில் தங்குகிறது. பூமியின் அச்சு சுமார் 23.5 டிகிரி சாய்ந்திருப்பதால், வட அரைக்கோளத்தில் கோடை காலங்களில் பகல் நேரம் அதிகரிக்கிறது. சில பகுதிகளில் சூரியன் முழுமையாக மறையாமலும் இருக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த தனித்துவமான இயற்கை நிகழ்வு நார்வே மக்களின் வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது. இரவு நேரத்திலும் வெளிச்சம் இருப்பதால் மக்கள் அதிக நேரம் வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக மாறுகிறது. மே மாதம் முதல் ஜூலை மாத இறுதி வரை ஹேமர்ஃபெஸ்ட் போன்ற பகுதிகளில் சூரியன் முழுமையாக மறைவதே இல்லை. “ஒளி நிறைந்த இரவு” என அழைக்கப்படும் இந்த அனுபவத்தை காண ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நார்வேக்கு வருகிறார்கள்.



