திருமண வாழ்க்கை தொடக்கத்தில் இருப்பது போல் மகிழ்ச்சியாக தான் கடைசி வரை நீடிக்கிறதா? என்று கேட்டால் பலரது பதில் இல்லை’ என்பதாக தான் இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. திருமணமான புதிதில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் அன்பு, பாசம், அரவணைப்பு ஆண்டு கடக்க கடக்க மெல்ல மறந்து போய் விடுவதாகவும், அதற்கான காரணங்களான பலவற்றையும் தம்பதிகள் பட்டியலிடுவதை பார்த்திருப்போம்.
இதனால் பலர் விவாகரத்து பெற்று புதிய வாழ்க்கையை தேர்வு செய்கிறார்கள். இன்னும் சிலர் இதுதான் கெதி என வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இங்கு காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி, திருமண வாழ்க்கையில் விருப்பமின்றி ஒரே நாளில் பிரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த கப்பல் பொறியாளர் ஒருவருக்கும், பெண் மருத்துவர் ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தங்கள் காதலில் உறுதியாக இருப்பதாக கருதிய இந்த ஜோடி, இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என நினைத்த இருவரின் பெற்றோருக்கும் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
திருமணமான அடுத்த 24 மணிநேரத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. கணவர் கப்பலில் வேலை செய்வதால் நீண்ட நாட்கள் பிரிந்திருக்க வேண்டிய சூழலை மனைவி ஏற்க மறுத்துள்ளார். கணவர் வேலையை விடவும் மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் மோதல் தீவிரமடையவே இருவரும் ஒருமித்த கருத்துடன் பிரிய முடிவெடுத்தனர்.
விவாகரத்து கிடைக்கப் பல மாதங்கள் ஆகும் என்றாலும், இந்தத் தம்பதி திருமணமான அன்றே பிரிந்து வாழத் தொடங்கியதால் நீதிமன்றம் இவர்களுக்கு விரைவாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்படி பிரிந்த இந்தத் தம்பதியினரிடையே எந்தவிதமான வன்முறைப் புகார்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



