Facebook கமெண்ட்டால் வந்த விபரீதம்.. இலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை!

a7f575e0051860eb7fe222f4e4d8ae6f7a5f17dd1a7f865642108109bfe7003a

சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு கருத்து தொடர்பான வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து, தனது மகனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அனோஜன் சிவராசா என்ற அந்த இளைஞர் சவுதி அரேபியாவில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்து மத யாத்திரை தொடர்பான சம்பவம் ஒன்றை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் மத ரீதியான விவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த விவாதத்தின் போது, இந்து கடவுள் குறித்து மற்றொரு நபர் அவதூறான கருத்தை பதிவிட்டதாகவும், அதற்கு பதிலளித்த அனோஜன், தமிழில் நபிகள் நாயகம் முகமது குறித்து அவமதிக்கும் வகையிலான கருத்தை பதிவிட்டதாகவும் வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பதிவை பின்னர் அனோஜன் நீக்கியதுடன், வீடியோ மூலம் மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால், பதிவின் ஸ்கிரீன்ஷாட்கள் அவரது சவுதி அரேபிய முதலாளியிடம் சென்றுள்ளன. இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அனோஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் முதலில் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர், வழக்கை ஷரியா சட்டத்தின் கீழ் பரிசீலிக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 17-ம் தேதி அனுமதி வழங்கியதுடன், அனோஜனுக்கு மரண தண்டனையும் விதித்தது.

இந்த நிலையில், அனோஜனை விடுவிப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, செப்டம்பர் 21-ம் தேதி அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்து, அவருக்கு மன்னிப்பு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், நான்கு பேர் கொண்ட இலங்கை சட்டக் குழு சவுதி அரேபியா சென்று அனோஜனின் உள்ளூர் வழக்கறிஞர்களை சந்திக்க உள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு அனோஜனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அவரது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி சவுதி அதிகாரிகளால் அறிவிக்கப்படவில்லை. தூதரக ரீதியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து குடும்பத்தினர் பொது வெளியில் கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Also Read: அடுத்தடுத்து 4 படங்கள் வெற்றி.. இனி பெரிய ரிஸ்க் எடுக்கப் போகும் பிரபல தயாரிப்பாளர்!

Saranya

Next Post

ஆதார் பெயரில் சின்ன தவறா?. பெயரை மாற்றும் முன் இதை கவனிங்க.. இல்லனா மீண்டும் அலைய வேண்டியிருக்கும்!

Thu Oct 8 , 2026
ஆதார் அட்டையில் பெயர் தவறாக இருப்பது வங்கி KYC, மொபைல் இணைப்பு, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால் பெயரை திருத்துவதற்கு ஒரே நடைமுறை கிடையாது. பெயரில் உள்ள சிறிய எழுத்துப்பிழை முதல் முழுமையான பெயர் மாற்றம் வரை, மாற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தேவையான ஆவணங்களும் மாறுபடுகின்றன. ஆதார் பெயர் திருத்தம் தொடர்பான நடைமுறையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. […]
Aadhaar 2025

You May Like