லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை உறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA35 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்டது. இது ஹீத்ரோவிலிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து, நடு வானில் புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹீத்ரோவுக்கே திரும்பி வந்தது. விமானம் டோவர் ஜலசந்தி பகுதியில் பல முறை சுற்றி வட்டமிட்ட பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். “எங்கள் பயணிகளை மீண்டும் பாதையில் கொண்டு வர எங்கள் குழுக்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்,” என British Airways அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லுஃப்தான்சாவின் LH752 என்ற விமானம், போயிங் 787-9 ட்ரீம்லைனர் மூலம் பிராங்பேர்ட் நகரத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டது. ஆனால் பல்கேரிய வான்வெளியை கடந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மீண்டும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டது. ஜூன் 16 அதிகாலை 1.20 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தை அடைய இருந்த இந்த விமானம், தற்போது விமான நிலைய மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்து நடந்த சில தினங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது விமான பாதுகாப்பு குறுத்த அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளது. லண்டன் – சென்னை மற்றும் பிராங்பேர்ட் – ஹைதராபாத் பாதையில் சென்ற இரண்டு முக்கிய விமானங்கள், சிக்கலான சூழ்நிலைகளால் தரையிரக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.