வங்கதேசத்தின் மய்மன்சிங் மாவட்டத்தில், மத அவமதிப்பு செய்ததாக குற்றம்சாட்டி, ஒரு இந்து நபர் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம், பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் தலைவர் ஷரீப் உஸ்மான் ஹடியின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் கலவர சூழ்நிலையினிடையே ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தீபு சந்திர தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பாலுகா உபாசிலா பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், முகமது நபியை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி, ஒரு கூட்டம் தாஸை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியது.
இந்த கும்பல் தாக்குதலில் அவர் அடித்து கொல்லப்பட்டார்.. அடித்து கொன்ற பின், அவரது உடலை ஒரு மரத்தில் கட்டி தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பின்னர் நிலைமையை கட்டுப்படுத்தி, தாஸின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். ஆனால், இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொடூர சம்பவம், வங்கதேசத்தில் தற்போதைய அரசியல் பதற்றம் மற்றும் சமூக கலவரம் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஷரீப் உஸ்மான் ஹடி சிங்கப்பூரில் உயிரிழந்ததையடுத்து, வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த வாரம் சுட்டுக் காயமடைந்த ஹாதி, சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு மரணம் அடைந்தார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை வங்கதேசத்துக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்கிலாப் மஞ்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த உஸ்மான் ஹடி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கடுமையான விமர்சகராக விளங்கினார். மாணவர் போராட்டத்தின் போது, ஹசீனா அரசு வீழ்ச்சியடைவதில் முக்கிய பங்காற்றியவர் என்றும் கூறப்படுகிறது.
உஸ்மான் ஆதரவாளர்கள், அவரை கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை ஒப்படைக்காவிட்டால், வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்தை மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ், சனிக்கிழமை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஹாதியின் கொலைகாரர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஆனால் உஸ்மான் ஹடியின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிட்டகாங் (Chattogram) பகுதியில் உள்ள இந்திய உதவி உயர் ஆணையரின் இல்லம் மீது கற்கள் மற்றும் செங்கற்களை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை தலையீட்டால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, இந்திய உதவி உயர் ஆணையரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மூத்த வங்கதேச அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், ஹடியின் மரணம் வங்கதேசத்தில் அரசியல் கலவரத்தையும், இந்தியா–வங்கதேச உறவுகளில் பதற்றத்தையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Read More : கடலுக்கு அடியில் 7,000 ஆண்டுகள் பழமையான சுவர் கண்டுபிடிப்பு ! அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?



