புதிய யூடியூபர்களுக்கு செக்..! இலக்கை இரட்டிப்பாக்கிய Youtube நிறுவனம்..! இனி பணம் சம்பாதிக்க புது ரூல்ஸ்..!

Youtube 2026

உலக அளவில் முன்னணி ஆன்லைன் வீடியோ தளமாக திகழும் யூடியூப் (YouTube), பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் வருமானம் ஈட்டவும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம் தனது ‘யூடியூப் பார்ட்னர் புரோகிராம்’ (YouTube Partner Program) தகுதி விதிகளில் மிக முக்கியக் கெடுபிடிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.


புதிய அறிவிப்பின்படி, விளம்பரங்கள் மற்றும் யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மூலமாக வருமானம் ஈட்ட விரும்பும் புதிய படைப்பாளிகள் இனி கடுமையான இலக்குகளை எட்ட வேண்டியிருக்கும். தற்போது நடைமுறையிலுள்ள 4,000 மணிநேரப் பார்வைகள் (Watch Hours) என்பது இனி 8,000 மணிநேரமாக இரட்டிப்பாக்கப்பட உள்ளது. அதேபோல, ஷாட்ஸ் வீடியோக்கள் மூலம் வருமானம் பெற 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் பெற வேண்டும் என்ற நிலை மாறி, இனி 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் (Subscribers) இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், ஷாட்ஸ் வீடியோக்கள் மூலம் தொடர்ந்து விளம்பர வருவாய் பெற விரும்புபவர்கள் 90 நாட்களுக்குப் பிறகும் 10 மில்லியன் பார்வைகளை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்த இலக்கைத் தவறவிடும் சேனல்கள், வழக்கமான நீண்டநேர (Long-form) வீடியோக்கள் மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்டலாம். பின்னர் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஷாட்ஸ் வீடியோக்களுக்கான வருவாய்ப் பங்கீடு தானாகவே மீண்டும் செயலுக்கு வந்துவிடும்.

ஷாட்ஸ் வீடியோக்களுக்கான தகுதி வரம்புகளைக் கடினமாக்கியிருந்தாலும், சிறிய அளவிலான யூடியூப் சேனல்கள் பயன்பெறும் வகையில் மாற்று வருமான வழிகளை உருவாக்க யூடியூப் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதன்படி ‘யூடியூப் ஷாப்பிங்’ (YouTube Shopping) போனஸ்கள், பிராண்ட் கூட்டாண்மை சலுகைகள் மற்றும் புதிய டிரெண்டுகளை உருவாக்கும் படைப்பாளிகளுக்கான சிறப்புப் பணப் பரிசுகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதேவேளையில், 500 சந்தாதாரர்கள், 3 வீடியோக்கள் மற்றும் 3,000 மணிநேரப் பார்வைகள் அல்லது 3 மில்லியன் ஷாட்ஸ் பார்வைகள் கொண்ட சேனல்களுக்கான ‘ஃபேன் ஃபாண்டிங்’ (Fan-funding) தகுதி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவர்கள் விளம்பர வருமானம் பெற முடியாவிட்டாலும், ரசிகர்களின் நிதி ஆதரவு மூலம் தொடர்ந்து பயனடையலாம்.

முக்கியமாக, பொதுவெளியில் பதிவேற்றப்பட்ட நீண்டநேர வீடியோக்களின் பார்வைகள் மட்டுமே 8,000 மணிநேர கணக்கிலும், ஷாட்ஸ் ஃபீடில் பெறப்பட்ட பார்வைகள் மட்டுமே ஷாட்ஸ் கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படும். பிரைவேட் (Private), அன்லிஸ்டெட் (Unlisted) அல்லது நீக்கப்பட்ட வீடியோக்களின் பார்வைகள் கணக்கில் சேர்க்கப்பட மாட்டாது. இதுதவிர, தனது ‘பிரீமியம் லைட்’ (Premium Lite) சேவையை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து, படைப்பாளிகளுக்கான கூடுதல் சந்தா வருவாயை உருவாக்கவும் யூடியூப் திட்டமிட்டுள்ளது.

Read More : வீடு புகுந்து தாய், மகளை வெட்டி சாய்த்த காதலன்..! பல்லடத்தில் கொடூரம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Next Post

உறுதியாகிறதா திமுக - பாஜக கூட்டணி..? வானதி சீனிவாசன் பேட்டியால் அரசியலில் பரபரப்பு..!!

Tue Aug 11 , 2026
தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசின் வருகைக்கு பிறகு, மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலா வந்தன. இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, “அரசியலில் […]
Vanathi Stalin 2026

You May Like