கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் பணத்தை வசூலிக்கச் சென்ற பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயக்கம் ஏற்படுத்தும் வகையில் பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்த நிலையில், ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த அந்தப் பெண், தனது பெற்றோருக்கு அனுப்பிய அவசர குறுஞ்செய்தி மற்றும் லைவ் லொகேஷன் மூலம் போலீசாரின் உதவியை பெற்றுள்ளார்.
பர்கூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். நீண்ட காலமாகியும் அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாத நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷை தனது வீட்டுக்கு அழைத்த அந்தப் பெண், பணத்தை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
அந்த ஆவணத்தில், மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டியாக செலுத்த வேண்டும் என்றும், ஓராண்டுக்குள் ரூ.5 லட்சம் அசல் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தனக்கு வழங்க வேண்டிய வட்டிப் பணத்தை கேட்டு அந்தப் பெண் வெங்கடேஷை தொடர்பு கொண்டுள்ளார். பணத்தை தருவதாக கூறிய வெங்கடேஷ், குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற பெண்ணை, ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அவர் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கு வெங்கடேஷின் உறவினரான இளங்கோவும் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதில் மதுபானம் கலக்கப்பட்டிருந்ததை அறியாமல் அவர் அதை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடவும், அதை வீடியோவாக பதிவு செய்யவும் இருவரும் முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் முழுமையாக மயங்குவதற்கு முன்பே சூழ்நிலையை உணர்ந்த அந்தப் பெண், அங்கிருந்து தப்பிக்க வழியின்றி தவித்துள்ளார்.
அந்த நேரத்தில் தன்னிடம் இருந்த செல்போனை பயன்படுத்தி பெற்றோருக்கு WhatsApp மூலம் “Help Me” என்று தகவல் அனுப்பியுள்ளார். அதோடு, தான் இருக்கும் இடத்தின் லைவ் லொகேஷனையும் அவர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
மகளிடமிருந்து வந்த அவசர தகவலை பார்த்த பெற்றோர் உடனடியாக போலீசாரை அணுகியுள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண் அனுப்பிய லைவ் லொகேஷனை அடிப்படையாக வைத்து போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அந்தப் பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொகையை திருப்பிக் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட சந்திப்பு, பெண்ணுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் முயற்சியாக மாறிய இந்த சம்பவம் பர்கூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஆபத்தை உணர்ந்ததும் அந்தப் பெண் உடனடியாக அனுப்பிய “Help Me” தகவலும் லைவ் லொகேஷனும் போலீசாரின் மீட்பு நடவடிக்கைக்கு முக்கிய உதவியாக அமைந்துள்ளன.
Also Read: 118 சவரன் நகை.. யூடியூபர் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை; சிக்கிய முக்கிய தடயம்!



