ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் நேற்று (ஆக.11) அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கரிபா ஏரி ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும், மேலும் இது கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாகும். இது 1950-களின் பிற்பகுதியிலும் 1960-களின் முற்பகுதியிலும் சாம்பேசி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்ட போது உருவாக்கப்பட்டது. இந்தப் பிரம்மாண்டமான நீர்த்தேக்கம் 200 கிலோமீட்டருக்கும் மேல் நீளமும், சில இடங்களில் சுமார் 40 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அண்டை நாடான சாம்பியா ஆகிய இரு நாடுகளாலும் பகிரப்படுகிறது; இந்த இரண்டு நாடுகளுக்குமான சர்வதேச எல்லை இந்த ஏரியின் நடுவே செல்கிறது.
இந்தநிலையில், கரிபா ஏரியில் நேற்று (ஆக.11) அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஜிம்பாப்வேயின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தகவல்படி, இந்த விபத்தில் 77 பேர் உயிர் தப்பி ஏரியில் உள்ள ஒரு சிறிய தீவை அடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வர படகுகள் அந்தத் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிவில் பாதுகாப்புப் பிரிவு கூறுகையில், படகு அதன் அதிகாரப்பூர்வ கொள்ளளவை விட மிக அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு விவரங்களின்படி, 114 பெரியவர்கள் மற்றும் 5 குழு உறுப்பினர்கள் படகில் இருந்துள்ளனர். படகின் அதிகாரப்பூர்வ கொள்ளளவு வெறும் 90 பேர் மட்டுமே எனவும் கூறப்படுகிறது. ஆனால், பயணச்சீட்டு பெறும் வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படாமலிருப்பதால், உண்மையான பயணிகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினரும் படகுகளும் இந்த பரந்த ஏரி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும் நீருக்கடியில் தேடும் குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு பேரிடராக அறிவிக்க சிவில் பாதுகாப்புப் பிரிவு பரிந்துரைத்துள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதை ஜிம்பாப்வே போலீசார் உறுதி செய்தபோதிலும், விபத்தின் முழுமையான தகவல்கள் குறித்து வெளியாகவில்லை.
சமூக வலைத்தளப் பதிவுகளின்படி இந்தப் படகு ‘ம்புயா நெஹண்டா’ என அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிபா நகரத்தை அடைய கரிபா ஏரி வழியாகப் பயணிக்கும் கிராமப்புற மக்களால் இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



