சென்னையில் சில சொத்து உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக சொத்து வரி கணக்கிடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதுவரை ரூ.5,000 வரை செலுத்தி வந்த ஒருவருக்கு தற்போது ரூ.28,000 வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திடீரென இவ்வளவு அதிகரித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் சொத்து வரியும் ஒன்றாகும்.
குடியிருப்பு வீடுகள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்களுக்கு அவற்றின் பயன்பாடு, பரப்பளவு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சொத்து வரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 53-ன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது. 2022-23-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த இந்த மாற்றத்தில், குடியிருப்புகளின் பரப்பளவைப் பொறுத்து வெவ்வேறு பிரிவுகளாக வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
600 சதுர அடிக்குள், 601 முதல் 1,200 சதுர அடி, 1,201 முதல் 1,800 சதுர அடி மற்றும் 1,801 சதுர அடிக்கு மேல் என குடியிருப்புகள் வகைப்படுத்தப்பட்டன. பல ஆண்டுகளாக சொத்து வரி சீராய்வு செய்யப்படாத நிலையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டதாக அப்போது மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதன்பிறகும், சொத்துகளின் மதிப்பீடு மற்றும் வரி கணக்கீடு தொடர்பான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், தற்போது சில சொத்துகளுக்கான வரி தொகை திடீரென பல மடங்கு அதிகரித்திருப்பதாக உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், சொத்து வரியும் இவ்வாறு உயர்ந்திருப்பது தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். முறையான அறிவிப்பு இல்லாமல் வரி உயர்த்தப்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சொத்துகளின் தற்போதைய நிலையை கண்டறிவதற்காக மாநகராட்சி சார்பில் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சில சொத்துகளின் விவரங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் புகார்கள் அதிகரித்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மாநகராட்சியில் தற்போது புதிதாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், ஏற்கெனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த சில சொத்துகளுக்கான வரி கணக்கீடுகள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், கடந்த ஆண்டு செலுத்திய தொகையுடன் ஒப்பிடும்போது சிலருக்கு தற்போது பல மடங்கு அதிகமாக வரி வந்திருப்பதாக தெரிகிறது என்றும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை புதிய சொத்து வரி உயர்வு என்று கூறுவது தவறான தகவல் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், வரி விதிப்பு குறித்து தகவல் கிடைத்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Also Read: ரீல்ஸ் மோகத்தால் பிரியும் குடும்பங்கள்… ஒரே வீட்டில் இருந்தும் பேசிக்கொள்ளாத அவலம்!



