தமிழகத்தில் இன்று முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 4, 5 தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 6, 7 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக மழை எங்கும் பதிவாகவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



