அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை, வரும் 20, 22, 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான இடங்களிலும், 21-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், வரும் 20-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான – கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



