பிரியாணி மீதான ஆசையில் ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்தி மட்டன் பிரியாணி ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெறும் ‘வெள்ளை சாதம்’ மட்டும் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அசாம் மாநிலம், போங்கைகான் (Bongaigaon) பகுதியில் வசிக்கும் சமேஷ் மோண்டல் என்பவர், ஸோமாட்டோ உணவு டெலிவரி செயலி மூலம் அப்பகுதியில் உள்ள ‘கொல்கத்தா பிரியாணி’ உணவகத்தில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு கைக்கு வந்த பார்சலைத் திறந்து பார்த்த அவருக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. பெட்டியில் மட்டன் பிரியாணிக்குப் பதிலாக வெறும் வெள்ளை சாதமும், அதனுடன் ஒரு பாக்கெட் சாலட்டும் மட்டுமே இருந்துள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமேஷ் மோண்டல், “நான் மட்டன் பிரியாணிக்குத்தான் பணம் செலுத்தினேன், வெள்ளை சாதத்திற்கு அல்ல. பசியுடன் காத்திருந்த எனக்கு இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வெறும் வெள்ளை சாதத்துடன் கொஞ்சம் சாலட் வழங்கிய அந்த உணவகத்திற்கு நன்றி. இந்த மோசடிக்கான முறையான விளக்கத்தையும் உரிய தீர்மானத்தையும் எதிர்பார்க்கிறேன்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். எனினும், ஸோமாட்டோ நிறுவனம் உடனடியாகத் தலையிட்டு தனக்கான பணத்தைத் திரும்ப வழங்கிவிட்டதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இந்தப் பதிவிற்கு இணையவாதிகள் பலரும் வேடிக்கையான மற்றும் தங்களின் சொந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையிலான கமெண்ட்களைப் பகிர்ந்து வருகின்றனர். “பணம் திரும்பிவிட்டது உண்மைதான், ஆனால் அந்த மட்டன் பிரியாணி ஏக்கத்திற்கு என்ன செய்வது?” என்று பலரும் நையாண்டியுடன் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


