திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப்பகுதியில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டி ஏகலனையாம்பாளையம் புதூரைச் சேர்ந்த செல்லத்துரையின் மனைவி வடிவுக்கரசி (45) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வடிவுக்கரசியை ஸ்கூட்டரில் அழைத்து வந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (55) என்பதும், அவரே கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் மறைந்து இருந்த சங்கரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் சங்கர் கூறியதாவது,
“நான் போலீசாக பணியாற்றி 1998ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றேன். எனக்கு 4 மனைவிகள், 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். எனக்கும் வடிவுக்கரசிக்கும் கள்ளக்காதல் இருந்தது.
வடிவுக்கரசியின் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, இருவரும் சேர்ந்து பணம் வாங்கி செலவழித்துவிட்டோம். வேலை கிடைக்காததால் அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டு உறவினர்கள் நெருக்கடி கொடுத்தனர். அதையடுத்து, வடிவுக்கரசி என்னிடமும் பணத்தை கேட்கத் தொடங்கினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த கோபத்தில் அவரை கொலை செய்ய முடிவெடுத்தேன்.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, பணம் வாங்கித் தருவதாக கூறி அவரை ஸ்கூட்டரில் வட்டமலை அணை அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்தேன். வழியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி, இருவரும் மது அருந்தினோம். அப்போது மீண்டும் பணப்பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரத்தில் அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கினேன். அவர் உயிரிழந்ததும், அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை எடுத்துக் கொண்டு, அடையாளம் தெரியாமல் முகத்தை சிதைத்து தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றேன்” என தெரிவித்துள்ளார். சங்கரிடமிருந்து 6 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அவரை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Read more: நயினார் நாகேந்திரனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது..!! பதிலடி கொடுத்த செங்கோட்டையன்..



