ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், உணவே நமது முதல் மருந்தாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில், உணவை மருந்தாக சாப்பிடுவதற்குப் பதிலாக, மருந்துகளை உணவைப் போல உட்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை உணவுகளை போதுமான அளவில் சாப்பிடாததே. பலருக்கு எந்த காய்கறியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது கூட தெரியாமல் இருக்கிறது.
இதனால், இயற்கையாகவே உணவின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துக்களைத் தவிர்த்து, அதே சத்துகளை மாத்திரைகள் மற்றும் சப்ளிமெண்ட்கள் மூலம் பெற முயற்சிக்கிறோம். உதாரணமாக, வைட்டமின் சி பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகவே அதிக அளவில் இருந்தாலும், அவற்றை உணவில் சேர்ப்பதற்குப் பதிலாக பலர் நேரடியாக வைட்டமின் சி மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இந்த பழக்கம் நீண்ட காலத்தில் உடலின் இயல்பான ஊட்டச்சத்து சமநிலையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், எளிதில் கிடைக்கும் ஒரு காய்கறியாக இருந்தாலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ப்ரொக்கோலி குறித்து தெரிந்துகொள்வோம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த காய்கறி தோன்றியதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தாலிய மொழியில் உள்ள “Broccolo” என்ற சொல்லிலிருந்தே “Broccoli” என்ற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது.
தோற்றத்தில் காலிஃபிளவரைப் போன்றே காணப்படும் ப்ரொக்கோலியின் பூப்பகுதி அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதனை தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும். குறிப்பாக இதில் நிறைந்துள்ள வைட்டமின் C, வைட்டமின் K, வைட்டமின் B9 (ஃபோலேட்), புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை உடலின் சீரான செயல்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகின்றன. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, தசை வளர்ச்சி மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகின்றன.
மேலும், ப்ரொக்கோலியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் செல்கள் சேதமடைவதை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதேபோல், இதன் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவக்கூடும். எனவே, சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக ப்ரொக்கோலியை அளவோடு சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு நல்ல தேர்வாக இருக்கலாம்.



