பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த இந்த மக்கள் ஆணை, “கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” என்று அவர் கூறினார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “திருவனந்தபுரத்திற்கு நன்றி! திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த மக்கள் தீர்பு, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை ஆகும். மாநிலத்தின் வளர்ச்சி அபிலாஷைகளை எங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எங்கள் கட்சி இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் ‘வாழ்க்கை எளிமையை’ மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு அற்புதமான முடிவை உறுதி செய்த, மக்களிடையே அயராது உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றிகள். இன்று, கேரளாவில் அடித்தட்டு அளவில் உழைத்து, இன்றைய இந்த முடிவு நிஜமாகியதை உறுதி செய்த தலைமுறை தலைமுறையான தொண்டர்களின் உழைப்பையும் தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய நாள். எங்கள் தொண்டர்களே எங்கள் பலம், அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்!” என்று மோடி குறிப்பிட்டார்.
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் செயல்பாட்டைப் பாராட்டிய பிரதமர், “மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரளம் முழுவதும் உள்ள மக்களுக்கு எனது நன்றிகள். கேரள மக்கள் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் கட்சிகளால் சோர்வடைந்துவிட்டனர்.” நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் கூடிய ஒரு வளர்ந்த கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே வாய்ப்பாக மக்கள் என்.டி.ஏ-வை பார்க்கிறார்கள்,” என்று கூறினார்.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி :
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) திருவனந்தபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. கேரளாவில் ஆட்சியில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) வெறும் 29 இடங்களை மட்டுமே வென்றது, அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) 19 வார்டுகளைக் கைப்பற்றியது. கேரள மாநில தேர்தல் ஆணையத்தின்படி, இரண்டு வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இருப்பினும், ஒரு சுயேச்சை வேட்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து விழிஞ்ஞத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துடன் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த முடிவுகள் இடதுசாரிகளுக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளன.
2020-ல் கேரளாவில் நடைபெற்ற முந்தைய உள்ளாட்சித் தேர்தல்களில், எல்.டி.எஃப் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெரும் வெற்றி பெற்று 52 வார்டுகளைக் கைப்பற்றியது. என்.டி.ஏ-வின் செயல்பாடும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது, பாஜக தலைமையிலான கூட்டணி 33 வார்டுகளை வென்றது. மறுபுறம், யு.டி.எஃப் 10 வார்டுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : விவசாயிகள் கவனத்திற்கு..! இனி பிஎம் கிசான் ரூ.12,000? மத்திய அரசு என்ன சொன்னது?



