நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சையாக பேசிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி – எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ் வி. சேகர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கில் கடந்த ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன்,நடிகர் எஸ்.வி. சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், ஒரு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும் எஸ்.வி.சேகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது எஸ்.வி.சேகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் சிறையில் சரணடைய அவருக்கு அளிக்கப்பட்ட விலக்கை ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி வரை நீட்டித்தனர்.